மீண்டும் சிறைச்சாலை கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படவுள்ள போகம்பறை

Report Print Ajith Ajith in சமூகம்
61Shares

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது பாவனையில் இல்லாத போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் போகம்பறை சிறைச்சாலையை நூதனசாலையாகவும், கலாசார பூங்காவாகவும் மாற்றுவதற்கு முன்னைய அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. இதனையடுத்து போகம்பறையில் இருந்த கைதிகள் பல்லேகெல்லையில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

எனினும் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவின் தகவல்படி தற்போது சிறைச்சாலைகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே போகம்பறையை மீண்டும் சிறைச்சாலையாக இயங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

போகம்பறை சிறைச்சாலை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்களால் நிர்மாணிக்கப்பட்டது.இதனை 2013ஆம் ஆண்டு மூடிவிட அப்போதைய அரசாங்கம் தீர்மானித்தது.