மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்து பலி

Report Print Thirumal Thirumal in சமூகம்
70Shares

மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் புளூம்பீல்ட் பிரிவைச்சேர்ந்த சுப்ரமணியம் அமிலசந்திரன் என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேயிலை மரங்களைப் பிடுங்கி, பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே மண்மேடு சரிந்ததால் அவர் மண்ணுக்குள் புதையுண்டு பலியானார் எனவும், தலையின் மேல் பகுதி மட்டுமே வெளியில் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.

கொழும்பில் தொழில் புரியும் குறித்த நபர் நேற்றிரவே வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பின்னர் மாணிக்கக்கல் அகழப்போவதாக மனைவியிடம் கூறிவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டைவிட்டுச் சென்றுள்ளார்.

பொழுது விடிந்ததும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச்சென்ற போதே அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.