காலி - பூஸா சிறைச்சாலையில் கடும் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாதாள உலக முக்கிய உறுப்பினர்களான கஞ்சிபானை இம்ரான், வெலே சுதா, கெவுமா, ஜூசான் மற்றும் சூஸி உள்ளிட்ட 43 கைதிகள் அந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை கடந்த 10ஆம் திகதி ஆரம்பித்துள்ளனர்.
எனினும் இதில் 15 பேர் போராட்டத்தை ஒரு நாளில் விலக்கி கொண்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 28 கைதிகள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு பொட்ட நௌபர், ஆமி சம்பத் மற்றும் மூன்று கைதிகள் ஆதரவு வழங்க மறுத்துவிட்டனர்.
தமது வீட்டாருடன் பேசுவதற்காக தொலைபேசி வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். தம்மை சந்திக்க வரும் சட்டத்தரணிகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட கூடாது போன்ற கோரிக்கைகளையே உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகள் முன்வைத்துள்ளனர்.