மன்னார் போக்குவரத்துச்சாலைக்கு திடீர் விஜயம் செய்த இ.போ.சபையின் தலைவர்

Report Print Ashik in சமூகம்

இலங்கை அரச போக்குவரத்து சேவையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மன்னார் அரச போக்குவரத்துச் சபையின் பிரதான சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை நேற்றைய தினம்மேற்கொண்டுள்ளார்.

வடமாகாண போக்குவரத்துசாலைகள் தொடர்பாக காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக மேற்படி விஜயம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விஜயத்தின் போது மன்னார் போக்குவரத்துசாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக மன்னார் போக்குவரத்துசாலை முகாமையாளரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் போக்குவரத்துச் சாலைக்கான பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும், அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கான நிர்வாக தேவைகள் தொடர்பாகவும் தற்போது தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களின் நிரந்தர நியமனம் வழங்குதல் தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மன்னார்ச் சாலை முழுவதுமாக ஆராய்ந்த தவிசாளர், பழுதடைந்துள்ள நிலையில் காணப்படும் பேருந்துகளை பயன்படுத்துவது தொடர்பாகவும் பேருந்துகளுக்கான வர்ணம் பூசும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

அதேநேரத்தில் மன்னார் நகரசபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவையினருக்குள் காணப்படும் பிரச்சினை தொடர்பாக உடனடியாக ஆளுநர் மற்றும் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்வை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த கள விஜயத்தின் போது இலங்கை அரச போக்குவரத்து சேவையின் வடபிராந்திய பொறுப்பதிகாரி ராஜ கருணா மற்றும் இலங்கை அரச போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் அருணாஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.