பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்
146Shares

கிளிநொச்சி - பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அப்பகுதியில் வசிக்கும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பரந்தன் குமரபுரம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரசாயனக் கழிவுகள் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

மேலும் பரந்தனில் வசிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த தொழிற்சாலைகள் அமைந்தால் அதை நாம் எதிர்ப்போம். கடந்த அரசாங்கத்திற்கு எம்மால் ஒரு திட்ட முன்மொழிவு கொடுக்கப்பட்டது. பரந்தன் பகுதியில் வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பது தொடர்பில் கொடுக்கப்பட்டது அவ்வாறு அமையப் பெற்றால் நாம் அந்த திட்டத்தை வரவேற்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பிரதேச சபையின் உறுப்பினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.