உதார சம்பத்தை கைது செய்ய பிடியாணை

Report Print Steephen Steephen in சமூகம்
49Shares

போதைப் பொருள் விற்பனையாளர் எனக் கூறப்படும் உதார சம்பத் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றிய ஹெரோயின் போதைப் பொருள் தொகையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் 13 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் 14வது குற்றவாளியாக இந்த நபரே சேர்க்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான அரச மன்றாடியார் திலீப பீரிஸ் முன்வைத்த விடயங்களை ஆராந்த கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்தா லியனகே இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

வழக்கின் 14வது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள உதார சம்பத் தற்போது துபாய் நாட்டில் இருப்பதாகவும் அவர் இலங்கையில் இருந்து வெளியேறிய விதம் தொடர்பாக கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரச மன்றாடியார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இலங்கையில் உள்ள தொலைபேசி நிறுவனங்களில் 55 சிம் அட்டைகளை பெற்று மிகப் பெரிய வலையமைப்பை வழி நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் அரச மன்றாடியார் இன்று முற்பகல் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்த நீதவான் பிரியந்த லியனகே, இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.