இலங்கைக்கு குறைந்தளவான விளையாட்டுத்துறை சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பது தொடர்பில் இலங்கையின் சுற்றுலா அமைச்சும், சுகாதார அமைச்சும் கலந்துரையாடியுள்ளன.
கொரோனவுக்கு மத்தியில் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருவதை படிப்படியாக அதிகரிப்பதன் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தவகையில் கொரோனா காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள உத்தேச லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்காக (எல்.பி.எல்) சிறிய விளையாட்டு குழுக்கள் நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கத்திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சிறிய விளையாட்டுக் குழுக்கள் நாட்டிற்கு வந்து ஒரே விருந்தகத்தில் தங்க அனுமதிக்கப்படுவதன் மூலம் அந்தக்குழுக்களின் வீரர்களது நகர்வுகளை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தொடர்ந்தும் இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.