கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக வன்னிப்பிராந்திய மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

Report Print Theesan in சமூகம்

இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத மரக்கடத்தலை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின் போது வன்னிப் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மரக்கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இயற்கை வளங்களை அழிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும், சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபடும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையினை மேற்கொள்பவர்களை பொதுமக்கள் பொலிஸாருக்கு இனங்காட்ட வேண்டும் அல்லது எமது அவசர அழைப்பு தொலைபேசிக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்வோம்.

இயற்கை அழிவுகளை தெளிவுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு இயற்கை தொடர்பான தெளிவை ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.

மரங்களை அழிப்பதால் எமது நாட்டிற்கு ஏற்படும் அழிவுகளை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமது பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மரக்கடத்லை முறியடிக்க பொதுமக்கள் எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இன்னும் சில தினங்களில் மரக்கடத்தல் மேற்கொள்ளும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.