மட்டக்களப்பில் மாநகர சபைக்கு உட்பட்ட பல வீதிகள் விஸ்தரிப்பு

Report Print Kumar in சமூகம்

பொது மக்களின் அன்றாட போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கோடு மாநகரசபைக்குட்பட்ட பல வீதிகள் விஸ்தரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை என்பன இணைந்து வாகன நெரிசலினை குறைத்து போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு பன்சலை வீதி, அருணகிரி வீதி மற்றும் கல்லடி விபுலானந்தா அவனியு உள்ளிட்ட வீதிகளை விஸ்தரித்து அவற்றை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வீதி அபிவிருத்தி வேலைகளில் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பொறியியலாளர்கள், தொழிநுட்ப அலுவலர்கள் ஆகியோர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் ஏற்படும் வாகன நெரிசலினை கட்டுப்படுத்தும் நோக்கில் விசாலமான வீதிகளாகவும், வடிகால் அமைப்புடன் கூடிய வீதிகளாகவும் மேற்படி வீதிகள் அகலமாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றமையால், இவ்வீதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் மதில்கள் உள் நகர்த்தி மீள நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.