வெளிநாடு சென்ற தாயின் குழந்தைகளுக்கு நெருப்பினால் சூடு வைத்த உறவினர்கள்! நீதிமன்றத்தின் உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களுக்கு நெருப்பினால் கையில் சூடு வைத்த இருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது பத்தினிபுரம்,பாலம்பட்டாறு,தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 38 வயதுடைய கணவன்,மனைவியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தந்தை வேறு திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் தாய் வெளிநாடு சென்ற நிலையில் அவரின் அக்காவிடம் 15 மற்றும் 10 வயதுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட நிலையிலேயே இரண்டு குழந்தைகளுக்கும் கையில் நெருப்பை காய்ச்சி கம்பியினால் சூடு வைத்துள்ளதாக பொலிஸார் குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்த பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் மருத்துவ அறிக்கைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.