வவுனியாவில் ஆளணி பற்றாக்குறையால் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை!

Report Print Theesan in சமூகம்

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் ஆளணி பற்றாக்குறை இருப்பதனால் 14 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சாலையின் அலுவலகர் ஒருவர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவிடம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி வவுனியா பாலமோட்டை பகுதிக்கு பாடசாலை நேரங்களில் காலை 7 மணிக்கு வவுனியாவில் இருந்து பேருந்து சேவை ஒன்றை முன்னெடுக்குமாறு பொது அமைப்புகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சாலை அலுவலகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது சாலையில் ஆளணி பற்றாக்குறையால் தினமும் 14 பேருந்துகள் சேவையாற்ற முடியாத நிலையில் உள்ளது. நான்கு சாரதிகள் விபத்து காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், சில காப்பாளர்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 14 சாரதிகள் மற்றும் 14 காப்பாளர்கள் இருக்கும் பட்சத்தில் முழுமையான வகையில் போக்குவரத்து சேவையினை மேற்கொள்ள முடியும். இது தொடர்பான கோரிக்கைகளை அனைத்து இடங்களிற்கும் அனுப்பியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.