வாள்வெட்டுக்கு இலக்காகி மாணவர் உயிரிழந்த சம்பவம்! சந்தேகநபர்களின் அடையாள அணிவகுப்பு நாளை

Report Print Rusath in சமூகம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறைப் பிரதேசத்தில் கடந்த 22.08.2020 அன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவரது கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் அடையாள அணிவகுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொம்மாதுறை விநாயகர் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவரே வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.

அந்தச் சம்பவம் தொடர்பாக மொத்தமாக 6 சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில் நால்வருக்கான அடையாள அணிவகுப்பே நாளையதினம் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

அந்தப் படுகொலைச் சம்பவத்தில் ரமணன் திவ்வியராஜின் உறவினர்கள் இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கலடி பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் செங்கலடி, கொம்மாதுறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலே இறுதியில் படுகொலையில் போய் முடிந்தது என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.