ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டையாறு பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கிண்ணியா பகுதியில் 3 கிரேம் 760 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கந்தளாய்- சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா - கட்டையாறு பகுதியைச் சேர்ந்த பக்கீர் தம்பி றினோஸ் (35 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது அவரிடமிருந்து இப்பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் ஹெரோயின் போதைப்பொருள் கிண்ணியா பிரதேசத்திற்கு எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றது என்பதை பற்றி விசாரணை செய்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தகவல்களை பெற உள்ளதாகவும் , 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.