இலங்கை அரசாங்கத்திடம் 10 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் இராணுவ வீரர்

Report Print Steephen Steephen in சமூகம்

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நடத்திய கண்ணீர் புகை தாக்குதலில் தனது கண் ஒன்று முற்றாக பார்வையிழந்துள்ளதாகவும் அதற்கு இழப்பீடாக அரசாங்கம் 10 மில்லியன் வழங்க வேண்டும் எனவும் கோரி அங்கவீனமடைந்த இராணுவ வீரர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுப்பது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த கங்கானம்கே நிஷாந்த மிஹிராஜ் என்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதனையடுத்து இந்த மனுவை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமது சம்பள பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குமாறு கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் நடத்திய ஆர்ப்பாட்த்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக தனது ஒரு கண் முற்றாக பார்வையிழந்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தான் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தாக்குதல் நடத்தியதன் மூலம் பொலிஸார் தனது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகவும் மனுதார் தெரிவித்துள்ளார்.