முகநூல் விமர்சனத்தால் முச்சக்கரவண்டியில் சபைக்கு வந்த காரைதீவு பிரதேசசபை தவிசாளர்

Report Print Varunan in சமூகம்

முகநூலில் சாரதி குறித்து விமர்சனம் வெளிவந்தமையினால் சபை அமர்வுக்கு முச்சக்கரவண்டியில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி என்பவர் தனது முகநூலில் தவிசாளரின் சாரதியின் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாகவும் தவிசாளர் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களுக்காக காரைதீவு பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு சென்று வந்துள்ளமை தொடர்பில் விமர்சனம் செய்துள்ளதுடன் சாரதிக்கான மேலதிக நேர கொடுப்பனவை சபை நிதியிலிருந்து வழங்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சபையில் கடமையாற்றும் அனைத்து சாரதிகளும் இன்று காலை வேலைநிறுத்த போராட்டம் ஒன்றினை இணைந்து மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து முச்சக்கரவண்டி ஒன்றில் சபைக்குச் சென்ற தவிசாளர் ஜெயசிறில் தனது அறைக்கு சென்று குறித்த முகநூலில் விமர்சனம் செய்த பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறியை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் பிரதேச சபையின் விடயங்களை விளங்கி செயற்படுமாறும் புதிய உறுப்பினராக சபைக்கு வந்து அரசியலுக்காக அவதூறுகளை எமது சபைக்கு வழங்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட உறுப்பினரும் தனது கருத்தினை தெரிவித்துள்ள போதிலும் சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் சமரசம் செய்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மேலும் பணி பகிஷ்கரிப்பிற்கு தயாராகிய சாரதிகள் அனைவரிடமும் தவிசாளர் ஜெயசிறில் கேட்டுக்கொண்டதற்கு அமைய மீண்டும் வழமை போன்று வேலையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.