நான்காண்டு காலப்பகுதியில் வடக்கில் ஆயிரக்கணக்கான அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு

Report Print Yathu in சமூகம்

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டுவரும் ஸார்ப் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் ஒட்டுசுட்டான் மற்றும் பச்சிலைப்பள்ளி பகுதிகளில் மட்டும் 24,065 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ இவ் விடயத்தை கூறியுள்ளார்.

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இக்காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் பதின்மூன்று இலட்சத்து எழுபத்தைந்தாயிரத்து முன்னூற்று இருபத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து இருபத்திநான்காயிரத்து அறுபத்தைந்நு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளனர்.

இந்த நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.