தேர்தல் காலத்தில் இருந்து இதுவரை தினமும் 7 ஏக்கர் காட்டு பகுதி அழிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

கடந்த பொதுத்தேர்தலில் இருந்து இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் பாதுகாக்கப்பட்ட காடுகளில் தினமும் சுமார் 7 ஏக்கர் வரை அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இளைஞர் சக்தியின் பிரச்சார செயலாளர் ரசிக ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்திற்குள் ஹொரவபொத்தானை ரத்மலே காட்டில் 150 ஏக்கரும், ஆனவிழுந்தாவ ரும்சா சதுப்பு நிலத்தில் 2 ஏக்கரும், வண்ணாத்துவில்லு எழுவான்குளத்தில் 100 ஏக்கரும், கிரிந்தவில் 30 ஏக்கர் சதுப்பு நில காடுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதியில் இருந்து கடந்த 41 நாட்களில் 282 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தினமும் 7 ஏக்கர் வன நிலம் அழிக்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனத்திற்கு மத்தியில் வீதியை நிர்மாணித்து மேற்கொள்ளப்படும் சுற்றுச் சூழல் அழிப்பு இதில் அடங்காது. இந்த துரித வன அழிப்பானது ஒரு அசாதாரண நிலைமை.

அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மற்றும் அரவணைப்பின் கீழ் பல இடங்களில் காடுகள் அழிக்கப்படுகின்றன.

இதுவரை இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுற்றாடலுக்கு இசைவான அபிவிருத்தி பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேசியது. மா கன்று ஒன்றை நாட்டிய பின்னரே ஜனாதிபதி தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

அவை அனைத்து மிகப் பெரிய ஊடக கண்காட்சிகளாக மாறியுள்ளன. சுற்றாடலுக்கு இசைவான அபிவிருத்தி என்பது எப்படி இருந்தாலும் இருக்கின்ற காடுகளை கூட பாதுகாக்க முடியாத அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ளது.

தற்போது இது சம்பந்தமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதில் பயனில்லை. யார் தவறு செய்திருந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

இந்த காடு அழிப்பு தொடர்பில் நியாயத்தை நிறைவேற்ற அரசாங்கம் தாமதிக்குமாயின் அரசாங்கம் அவற்றை மூடிமறைக்கின்றது என்பதே அர்த்தம் எனவும் ரசிக ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.