இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் கண்டன போராட்டம்

Report Print Ashik in சமூகம்

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் இன்று காலை பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு, கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம் மன்னார் நகர சபையினால் நேற்று இரவு மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதோடு, மன்னார் பஸார் பகுதியில் காலை 9 மணியளவில் கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.

மன்னாரில் இருந்து அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிக இடம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் மன்னார் நகர சபையின் புதிய பேருந்து தரிப்பிட பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் பாவனைக்காக குறித்த பேருந்து நிலையம் கையளிக்கப்பட்டது.

குறித்த பேருந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் சேவைகள் இணைந்த சேவையாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் மாத்திரம் இடம்பெற்று வந்த போதும், மன்னார் அரச போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை.

எனினும் மன்னார் நகரசபையிடம் கால அவகாசம் கோரிய நிலையில் தொடர்ச்சியாக தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தில் அரச போக்குவரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோரிய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகரசபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை மன்னார் நகரசபை நேற்று இரவு அதிரடியாக மூடியுள்ளது.

தமக்கு எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி குறித்த இடம் மூடப்பட்டடையை கண்டித்தே இன்றைய தினம் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு, கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மன்னார் பஸார் பகுதியில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பேருந்துகள் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்கள பணியாளர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

மன்னார் நகர சபைக்கு எதிராக முன் வைத்த கருத்துக்கள் தொடர்பில் உறுதிப்படுத்தும் வகையில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனை தொடர்பு கொண்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.