நாட்டில் நல்ல பல விடயங்கள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் புகழாரம்

Report Print Rusath in சமூகம்

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரச நிர்வாகத்தின் கீழ் நல்ல பல விடயங்கள் நடப்பதாகவும் அவற்றை வரவேற்றாக வேண்டிய வரலாற்றுத் தேவை இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூரில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏறாவூரில் வடிகான் திட்டமும் கழிவு நீர் அகற்றும் திட்டமும் இந்தப் பகுதி தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.

தன்னாமுனையிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தை உள்ளடக்கியதாக சித்தாண்டி வரைக்கும் வடிகான் திட்டமும் கழிவு நீர் அகற்றும் திட்டமும் அமுலாக்கப்படவுள்ளன.

நாட்டிலே அரசியல் ரீதியாகப் பல விடயங்கள் நடந்து வருகின்றன. அத்தோடு நல்ல மாற்றங்களும் இடம்பெற்று வருகின்றன.

போதைப் பொருள் ஒழிப்பு விடயத்திலே ஜனாதிபதி அர்ப்பணிப்போடு தொடங்கியுள்ள வேலைத் திட்டத்தை முழு மனதோடு வரவேற்றாக வேண்டும்.

பாதாள உலகக் கோஷ்டிகள் நசுக்கப்படுகிறார்கள் இதற்கு நமது பூரண ஒத்துழைப்பையும் அரசாங்கத்திற்கான ஆதரவையும் வழங்க வேண்டும்.

இவ்வாறான நல்ல விடயங்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். அதேபோன்று அரசாங்கப் பணிமனைகள் இயங்குகின்ற விடங்களும் நல்ல மாற்றம் கண்டுள்ளன. இன்னும் பல விடயங்களில் முன்னேற்றம் இடம்பெறவேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பாகும்.

மாகாண சபைகளை மூன்றாகப் பிரிக்கின்ற ஒரு விடயம், அதிலுள்ள சாத்திய, அசாத்தியங்களுக்கு அப்பால் இருக்கின்ற மாகாண சபை நிருவாகத்தைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அதிகாரப் பகிர்வு மாகாணங்களுக்கு முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற விடயங்களில் அரசாங்கம் ஈடுபடாமல் ஏற்கெனவே இருக்கின்ற மாகாண சபை நிருவாகத்தைப் பலப்படுத்துவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

அவ்வாறு இந்த அரசாங்கம் செயற்படுகின்ற போது சிறுபான்மை மக்களினதும் நம்பிக்கையை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பெற்றுக் கொள்ளலாம்.

பிரதம மந்திரியினதும், ஜனாதிபதியினதும் புதிய அரசாங்கத்தினதும் அத்தனை சிறந்த எண்ணக் கருக்களும் உயிர்ப்பூட்டட வேண்டுமாயின் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இதனூடாக இந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். எனக்கூறியுள்ளார்.