சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக மன்னாருக்கு வந்த இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட புகையிரத பணியாளர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என சி.பீ.ஆர்.பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதோடு, மன்னாரில் மேலும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா - பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பி வந்து மன்னார் சௌத்பார் புகையிரத பகுதியில் மறைந்து இருந்த போது குறித்த நபரை பிடிப்பதற்கு உதவிய புகையிரத நிலைய பணியாளர்கள் மூன்று பேரின் சி.பீ.ஆர் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் அதன் முடிவுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த மூன்று பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பி வந்த நபருக்கு திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சி.பீ.ஆர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

குறித்த மூன்று பணியாளர்களையும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி விட்டு புகையிரத நிலையத்தை திறக்க முடியுமா? என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.

மேலும் இன்று அதிகாலை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக வந்தார்கள் என நம்பப்படுகின்ற இரண்டு நபர்கள் கடற்படையினரினால் தலைமன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மன்னார் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு பள்ளிமுனைப் பகுதியில் உள்ள அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

இவர்களுக்கான பி.சீ.ஆர்.பரிசோதனைகள் ஒரு வாரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்போம் என அவர் கூறியுள்ளார்.