தற்கொலைகளை தடுப்பதற்கு உள நல வைத்தியர்கள் ஆலோசனைகளை வழங்க முன்வரவேண்டும்

Report Print Theesan in சமூகம்

அண்மைய காலங்களாக அதிகரித்து காணப்படும் தற்கொலைகளைத்தடுத்து நிறுத்துவதற்கு உள நல வைத்தியர்கள், பொது அமைப்பினர்கள், உறவினர்கள் ஆகியோர் தமது பங்களிப்புக்களை வழங்குமாறு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார் .

வவுனியாவில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஒருவாரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து காணப்படுகின்றது.

இதற்கான காரணங்களை இனங்கண்டு இடம்பெற்று வரும் தற்கொலைகளை தடுத்து நிறுத்துவதற்குரிய பொறிமுறைகளை உருவாக்குவதற்கு சேவை நலன்கொண்ட உள நல வைத்தியர்கள் , பொது அமைப்பினர் ஆலோசனை வழங்குநர்கள் உறவினர்கள் முன்வரவேண்டும்.

ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் அக்காரணம் மிகச்சிறியதாகவே காணப்படுவதுடன் அதனை தீர்த்துக்கொள்ளவும் அவரால் முடிகின்றது .

இவ்வாறு இருந்தும் அவர் தற்கொலை செய்யும் நிலையை மாற்ற முன்வரவேண்டும். எனவே நபர் ஒருவர் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறவினர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் அவரை ஒரு உள நல வைத்தியரிடம் அல்லது உள நல ஆலோசனை வழங்குநரிடம் மதகுருவிடம் அழைத்து சென்று அவரிடம் காணப்படும் மன அழுத்தங்களை அறிந்துகொள்ள முற்பட வேண்டும்.

ஒரு சில நொடிகளில் ஏற்படும் மன அழுத்தங்களால் அவர்களது வாழ்வையே மாய்த்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றுவிடுகின்றார் .

பின்னர் அவரது உறவினர்கள் குடும்பத்தினரின் நிலைகளை சற்றும் நினைத்துப்பார்ப்பதில்லை. அவர்களையும் துன்பத்திற்கு இட்டுச் செல்லும் முடிவுகளை தற்கொலை செய்பவர் எடுப்பதால் அவரது உறவினர்கள் மன உள ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் . இதிலிருந்து அவர்கள் மீட்சியடைவதற்கு பல ஆண்டுகள் ஏற்படுகின்றன .

எனவே தற்கொலை செய்யும் நிலையை அவரது மனத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கையினை உள நல வைத்தியர்கள், உளநலத்துறை அதிகாரிகள், சிறுவர்கள், பெண்கள் அமைப்பினால் முன்னெடுக்க முடியும்.

தற்கொலை செய்யும் நிலைக்குச் சென்றவர்கள் மனம்விட்டு உறவினர்கள் பெரியோர்களுடன் உரையாடவேண்டும். இவ்வாறான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு பொது அமைப்புக்கள் தமது பங்களிப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.