மதுபோதையில் முச்சக்கர வண்டியில் சென்றவர்கள் ஏற்படுத்திய விபத்தினால் பதற்றம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பார் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் வந்தவர் மதுபோதையில் காணப்பட்டதனால் அங்கு பதற்ற நிலைமையேற்பட்டது.

பார் வீதியில் உள்ள சின்ன லூர்து அன்னை ஆலயத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் மதுபோதையுடன் காணப்பட்டதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது அங்கு இளைஞர்கள் ஒன்றுகூடியதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் அங்குவந்த மட்டக்களப்பு தலைமைக போக்குவரத்து பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் விபத்து இடம்பெற்ற பின்னரும் கைகளில் மதுபோத்தலுடன் காணப்பட்டதனால் அப்பகுதியில் மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நபர்களை போக்குவரத்து பொலிஸார் அழைத்துச்சென்றதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலைமை முடிவுக்கு வந்தது.