நீண்ட காலமாக பாவனையின்றி மூடப்பட்டிருக்கும் பாண்டியன்குளம் பொதுச்சந்தை

Report Print Yathu in சமூகம்
82Shares

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட பாண்டியன்குளம் பொதுச்சந்தை நீண்ட காலமாக மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பாண்டியன்குளம் பொதுச்சந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் பெருந்தொகையான நிதி செலவில் குறித்த சந்தையின் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட போதும் இந்த சந்தைத் தொகுதியானது செயலிழந்த நிலையிலேயே காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

இதனால் இந்த சந்தையிலே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சில வியாபாரிகள் முழுமையாக தமது தொழிலை இழந்துள்ளனர். அதேநேரம் குறிப்பிட்ட ஒருவர் மாத்திரம் பிறிதொரிடத்தில் உள்ள வாடகை கடை ஒன்றில் தனது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக மீள்குடியேற்றத்தின் பின்னர் பாண்டியன்குளம் பிரதான சந்தியில் அதாவது பிரதேச செயலகம், பாடசாலை, கமநல சேவை நிலையம் ஆகியவற்றுக்கு அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் இந்த சந்தையை அமைக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அப்போதிருந்து சபை நிர்வாகம் சிலர் சுயநலத்துக்காக தனிப்பட்ட இடம் ஒன்றில் இவ்வாறு சந்தையை அமைத்தமையே இவ்வாறு காணப்படுகின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளது என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.