அகில இலங்கை புகையிரதக்கடவை காப்பாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதி

Report Print Theesan in சமூகம்
46Shares

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அகில இலங்கை ரீதியில் புகையிரதக்கடவை காப்பாளர்களின் நிரந்தர நியமனம் கோரிக்கைக்கு உரிய தீர்வை ஒரு வாரத்தில் பெற்றுத்தருவதாக போக்குவரத்து அமைச்சர் நேற்று வாக்குறுதி வழங்கியுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேயை வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் தலைமையில் சென்ற குழுவினர் நேற்றைய தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது புகையிரதக்கடவை ஊழியர்களின் பிரச்சினை தொடர்பான மனுவையும் கையளித்திருந்தனர்.

புகையிரதக்கடவை காப்பாளர்களுக்கான நிரந்தர தீர்வை புகையிரதத் திணைக்களம் மற்றும் ஜனாதிபதியுடன் பேசி ஒரு வாரத்தில் பெற்றுத் தருவதாக போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதி வழங்கியுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி விசேட அத்தியட்சகர் பந்து நிமல் வாதிஸ்டவை கடந்த 02-09-2020 அன்று சந்தித்து புகையிரதக்கடவை காப்பாளர்கள் நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தினால் போக்குவரத்து அமைச்சர் மற்றும் புகையிரதத்திணைக்களத்தின் பொது முகாமையாளருக்கு புகையிரதக்கடவை ஊழியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.