வவுனியாவில் யானைகள் அட்டகாசம்! வீடொன்று சேதம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, ஒமந்தை, ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் யானையின் அட்டகாசத்தால் வீடொன்று சேதமடைந்துள்ளதுடன், களஞ்சியப்படுத்தியிருந்த நெல் மூடைகளும் இன்று அதிகாலை நாசமாகியுள்ளது.

ஒமந்தை, ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட செங்கராத்திமோட்டை கிராமத்திற்குள் புகுந்த யானையொன்று, சிவலிங்கம் சிவரூபன் என்ற குடும்பத்தின் அரை நிரந்தர வீட்டின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த வீட்டில் களஞ்சியப்படுத்தியிருந்த நெல் மூடைகளையும், பயன்தரும் மரங்களையும் நாசம் செய்துள்ளது.

யானையின் தாக்குதலில் இருந்து தப்பிய வீட்டார் யானையை விரட்ட முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அங்கு அட்டகாசம் புரிந்த யானை அதன் பின் காடு நோக்கிச் சென்றுள்ளது.

யானையின் தாக்குதலில் வீடு சேதமடைந்த போதும் வீட்டில் வசித்தவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.