சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

Report Print Kumar in சமூகம்
36Shares

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பகுதிகளில் மதுவரித்திணைக்களத்தினர் மேற்கொண்ட முற்றுகையின்போது சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் போதைப்பொருள் அற்ற நாட்டினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மதுவரித்திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

அத்துடன் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கையின்போது கசிப்பு விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

இதன்போது பெருமளவான கசிப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கான கோடா மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த மூன்று தினங்களில் கோடா வைத்திருந்தவர்கள்,கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்த 21பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.