கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் தவிசாளருக்கு சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Suman Suman in சமூகம்
39Shares

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் ஆதனவரி தொடர்பில் உரிய தீர்வை எடுக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கரைச்சி பிரதேச சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினராலும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த கோரிக்கையினை கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கு எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்.

குறித்த கோரிக்கை கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் ஆதனவரி , அதிகரித்த வீதத்தில் காணப்படுவதாக பல்வேறுபட்ட தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் , அதற்குரிய தீர்வை எட்டும் நோக்கோடு என்னால் இரண்டு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன.

கிளிநொச்சி நகர வர்த்தக அபிவிருத்திச் சங்கம் , கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கம் , கிளிநொச்சி மாவட்ட வணிகர் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களையும் , சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இணைத்து 2020.08.26 ஆம் திகதி எனது அலுவலகத்திலும் , 2020.09.05 ஆம் திகதி K.K மண்டபத்தில் தங்களின் பிரசன்னத்தோடும் நடைபெற்ற கருத்துப் பகிர்வுகளின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதனவரி அறவீட்டு வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.