திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள இன்று மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

அத்துடன் தமது கடமைகளை ஆரம்பித்தமைக்கான கடிதத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இதன்போது கையளித்தார்.

கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான விசேட கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்களாகிய அனைவருக்கும் பாரிய பொறுப்பு காணப்படுவதாகவும், அதற்குரிய அரசியல் தலைமையை சிறப்பாக மேற்கொள்ள ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருக்கு கிடைக்க ஆசீர்வதிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

மாவட்ட மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும் அதற்குரிய வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் கபில நுவன் அத்துக்கோரள தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதியவர்களை சிலர் ஓர் இனவாதியாக சித்தரிக்க முற்பட்டனர். இம்முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் தற்போது 100,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்தமை எடுத்துக்காட்டாக அனைவருக்கும் அமைகின்றது. அதேபோன்று 50,000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள். சகல இன மக்களினதும் தேவைகள் காணப்படுகின்றன. அனேகமானவரின் தேவைகள் வெளிக்கொணரப்படாமல் காணப்படுகின்றது.

பல கிராமங்களில் ஒரு வேளை உணவை மட்டும் மிகவும் கஸ்டப்பட்டு உண்ணக்கூடியவர்கள் உள்ளனர். இவர்களைப்போன்றவர்களுக்கு உரிய வாழ்வாதார திட்டங்களை ஏற்படுத்தல் வேண்டும் என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.

மேலும் காணி, விவசாயம், மணல் அகழ்வு உட்பட பல விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள் , அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.