கொழும்பில் நாளை ஆரம்பமாகும் சர்வதேச புத்தக கண்காட்சி! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சுகாதார அதிகாரிகள் கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை உன்னிப்பாக கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச புத்தக கண்காட்சி நாளை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகின்றது, இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சுகாதார அமைச்சு வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற ஏற்பாட்டாளர்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து, கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அனைவரும் முகமூடி அணிந்து, உள்ளே நுழைந்து வெளியேறும்போது கைகளைக் கழுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் வெளியே அதிக அளவில் கூடிவருவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தினார். தங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவோம் என்று அமைப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சுகாதார அதிகாரிகள் அந்த இடத்தை உன்னிப்பாக கண்காணிப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.