பாடசாலை செல்லும் போது துப்பாக்கியை காட்டி கடத்திச் சென்று பின்னர் கைவிட்டு சென்றதாக மாணவி ஒருவர் முறைப்பாடு செய்த சம்பவம் ஒரு நாடகம் என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி நகரத்தில் மகளிர் பாடசாலையில் கற்கும் இந்த மாணவி தனது கையடக்க தொலைபேசியில் பார்த்த காட்சியை பின்பற்றி இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி தான் கற்கும் பாடசாலைக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கமைய குறித்த மாணவி கட்டுக்கதைகளை உருவாக்கியிருந்தார் என தெரியவந்துள்ளது.
சிறுமியின் பெற்றோரை அழைத்து பொலிஸார் விடயத்தை தெளிவுப்படுத்திய பின்னர் பெற்றோரின் அச்சம் நீங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்மாட்கையடக்க தொலைபேசியில் இவ்வாறான காணொளிகளை பார்ப்பதற்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட சிறுமி, போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்துள்ளார் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எப்படியிருப்பினும் சிறுவர்கள் தொடர்பில் எப்போதும் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.