வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! குறைந்த வட்டியில் கடன்

Report Print Vethu Vethu in சமூகம்
1446Shares

நாட்டில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்க வங்கிகளின் ஊடாக நூற்றுக்கு 6.25 வீத வட்டிக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தக் கடன் தொகையை 30 வருடங்களில் மீண்டும் செலுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதியான சர்வதேச வீட்டுத்தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் 1500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

“அனைத்து குடும்பங்களுக்கும் வசதியான வீடு” வழங்கும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இது காணப்படுகின்றது.

வீடு அவசியம் இருப்பினும் அதனை தனியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமை என்பது பெரும்பான்மையினரின் சிக்கலாகும். நகர, கிராம மற்றும் தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினையை அவர்களின் வாழ்வாதார மட்டத்தை உயர்த்தும் மட்டத்திலேயே தீர்க்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வீட்டை கொள்வனவு செய்வதற்கு 6.25 வீத வருடாந்த வட்டி வீதத்தில் 30 வருட காலத்திற்குள் செலுத்தும் வகையில் அரச வங்கி மூலம் கடன் வழங்குவதற்கு பொறி முறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய வகுப்பினரின் வருமானத்திற்கு ஏற்ற தொடர்மாடி வீடுகளை நிர்மாணிப்பதற்கு அவசியமான காணிகள் அமைச்சுக்கு இலவசமாக வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை, வட மாகாணத்தில் நலன்புரி 22 முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

“உங்களுக்கான வீடு, நாட்டிற்கு எதிர்காலம்” என்ற கருப்பொருளின் கீழ் கிராம சேவகர் மட்டத்தில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு 14,022 வீடுகளை தனது அமைச்சகம் ஏற்கனவே நிர்மாணித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திகா அனுருத்த தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 5ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக குடியிருப்பு தினத்திற்கு இணையாக ´சிறந்த தொடர்மாடி வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின்´ கீழ் வெரெல்லவத்த, மிஹிந்துபுர, பறங்கியா கும்புர, தஹய்யாகம, மத்தேகொட, சொய்சாபுர மற்றும் தங்கல்ல நகரை மையப்படுத்திய வகையில் 1500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த திட்டத்தின் கீழ் 5 வருட நிறைவில் 70,100 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

வீடு ஒன்றை வாங்க குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதி

  • மாவட்ட ரீதியாக 1500 புதிய வீடுகள்
  • வீட்டை கொள்வனவு செய்வதற்கு நீண்டகால கடன்
  • 2024 இறுதிக்குள் குறைந்த வருமானமுடைய 70100 குடும்பங்களுக்கு வீட்டு வசதி
  • நிர்மாணப் பணிகள் அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன்
  • கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் புதுப் பொழிவுடன்