இலங்கையில் முதன் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை

Report Print Yathu in சமூகம்
0Shares

இலங்கையில் முதன் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று காலை பத்து மணியளவில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்போது கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் கருத்து தெரிவிக்கையில்,

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமகன் ஒருவர் பிரதேச செயலகத்தின் கீழ் ஓர் விடயத்தினை பெற்றுக் கொள்வதற்கு அல்லது சேவையை பெற்றுக் கொள்வதற்கு இலகுபடுத்தலாக குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை பயன்தரவுள்ளது.

சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் பிரஜை குறித்த இலத்திரனியல் அட்டையை சமர்ப்பிக்கும் போது இலகுவாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

அதில் வாழ்வாதாரம், வீடு, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட தேவையுடையவர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் இன்று முதல் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் தமது குடும்ப விபரங்களை இலத்திரனியல் இலகுபடுத்தலின் ஊடாக சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுமக்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்றைய நாளின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், 57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ்.செனெரத்யபோ, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன், 571ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் டி.கே.எஸ்.கே.டொலகே, 572ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டி.எம்.பி.பி.டசநாயக, கரைச்சி, பூநகரி பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.