யாழ். செம்மணி இந்து மயானத்திற்குள் புதைக்கப்பட்டிருந்த மிதிவெடி மற்றும் கைக்குண்டு மீட்பு

Report Print Sumi in சமூகம்

யாழ். செம்மணி இந்து மயானத்திற்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதிவெடி மற்றும் கைக்குண்டு என்பன நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் யாழ். கல்வியங்காடு பகுதியில் வன்முறைக் கும்பலை சேர்ந்த விக்டர் சுந்தர் என்பவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா வன்முறைக் கும்பலை சேர்ந்தவர் என கூறப்படும் நிசா விக்டரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பன நிசா விக்டரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது பிறிதொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கிலும் சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் வைத்து நேற்று முன்தினம் காலை விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த குறித்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான நிசா விக்டர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்றுமுன் தினம் இராணுவத்தினரின் உதவியுடன் ஊர்காவற்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது "சந்தேகநபர், நபர் ஒருவரை வெட்டிப் படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் அவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். அத்தோடு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பனவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே அவை நீதிமன்றின் உத்தரவில் மீட்கப்பட வேண்டும்" என்று பொலிஸார் மன்றுரைத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பிணை விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.

இருதரப்பு விண்ணப்பத்தையும் ஆராய்ந்த மன்று, சந்தேக நபரை வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபரால் காண்பிக்கப்பட்ட மிதிவெடி மற்றும் கைக்குண்டு என்பன இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.