இராகலையில் மூன்று வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா, இராகலை பிரதான நகரில் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்த தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்ற போதும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்ற போதும் மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.