வவுனியாவில் அனுமதியற்ற முறையில் இயங்கும் உணவகத்திற்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் அனுமதியின்றி நடத்தப்படும் தாவுத் உணவகம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள தாவுத் உணவகம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கையில், 2018ஆம் ஆண்டிலிருந்து குறித்த உணவகம் அனுமதியற்று இயங்கி வருகின்றது.

காணிக்கான உரித்து தொடர்பான பத்திரம் அல்லது அதனை வாடகைக்கு பெற்றிருந்தால் அதன் உரிமையாளரின் சம்மத கடிதம் மற்றும் கட்டட அனுமதி போன்ற விடயங்களை வழங்கினாலே சபையினால் அதற்கான அனுமதி வழங்க முடியும்.

ஆனால் அது எதுவும் இல்லை. இவற்றை மையப்படுத்தி பிரதேச சபையால் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

சில விடயங்கள் அதில் இணைக்கப்படாமையினால் அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரமே சபையால் உணவகத்தை மூடமுடியும். எனவே நாம் மீண்டும் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த உணவகத்தை சபையின் செயலாளர் மற்றும் தொழிநுட்ப அதிகாரி சகிதம் கடமை நிமித்தம் ஒருமுறை நாம் பார்வையிட்டபோது தமது உணவகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனடிப்படையிலே எம்மீது விசாரணைகளும் இடம்பெற்றிருந்தது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதார பரிசோதகர், குறித்த உணவகத்தில் உணவுச்சட்டத்தின் கீழ் அனுமதியற்ற முறையில் வியாபாரம் செய்தல் என்ற விடயத்தை முன்வைத்து 2018ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்.

அதற்கமைய உணவகத்தை நடத்த நீதிமன்றால் இடைக்கால தடை அவருக்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவரது சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கமைய நீதிமன்றால் உணவகம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வழக்கு இடம்பெற்று வருகின்றது எமது கடமையை நாம் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த உணவகத்துடன் தொடர்புடைய வகையில் மூன்று வழக்குகள் வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நீதிமன்றின் நடவடிக்கைகளை நாம் பார்ப்பதுடன் இவ்விடயத்தை நான் அப்படியே விட்டுவிடப் போவதில்லை ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு.திலீபன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.