சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பொது மக்கள்! இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Murali Murali in சமூகம்

பொது மக்கள், கொரோனா தொற்று குறித்த சுகாதார ஆலோசனைகளை புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசமானது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான எந்தவொரு சுகாதார முறைகளையும் பொது மக்கள் பின்பற்றாத சூழ்நிலை சமூகத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், வீதிகளிலும், பொது போக்குவரத்திலும் சிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதை கண்டுள்ளோம்.

கொரோனா தொற்றின் ஆபத்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. சரியான சுகாதார நடைமுறைகள் இல்லாமல் பொது இடங்களில் அடிக்கடி மக்கள் கூடுகின்றனர்.

கொழும்பில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த சில பார்வையாளர்கள் சுகாதார நடைமுறைகளை கைவிட்டுள்ளதையும் கண்டுள்ளோம்.

இவ்வாறான நிலையில், மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறைகள் சுட்டிக்காட்டியுள்ளன.