தமது கிராமத்து காணியை தனிநபர் உரிமைகோருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - மாணிக்கர், இலுப்பைக்குளம் பகுதியில் உப குடும்பங்களுக்கு சேர வேண்டிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியினை மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் உரிமைகோருவதாக அப்பகுதி மக்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் எமது பகுதியில் வந்து 20 ஏக்கர் காணியை குத்தகைக்கு எடுத்து செய்து வந்தார். தற்போது கிராமத்தில் உள்ள பொதுக்காணியினை காணியற்ற உப குடும்பங்கள் துப்புரவு செய்து வேலி அடைத்திருந்த நிலையில், அதனை தனது காணியென்றும் அதற்கான பத்திரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் எங்களை அச்சுறுத்துகின்றார்.

இது தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டு பொலிஸாருடன் வந்து எம்மை அச்சுறுத்தியதுடன், காணியின் வேலியினையும் பிடுங்கி எறிந்துள்ளார்.

எமது மக்களுக்கு சேர வேண்டிய காணியினை வெளியிடத்தை சேர்ந்த ஒருவர் உரிமைகோருவதுடன், எம்மை அச்சுறுத்துவதனை எம்மால் ஏற்க முடியாது. எனவே எமக்கு உரிய தீர்வினை தரவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இவ்விடயம் தொடர்பாக நாளைய தினம் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி தீர்வினை வழங்குவதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.