மகிந்த மற்றும் கோட்டாபயவின் உறவுமுறை மைத்துனர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Steephen Steephen in சமூகம்

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிடம் ஸ்கைப் தொழிநுட்பம் மூலம் சாட்சியத்தை பெறுமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஜாலிய விக்ரமசூரிய ஆணைக்குழுவில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே ஆணைக்குழுவின் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினராக செயற்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கை தூதரகத்திற்காக அமெரிக்காவில் கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழலில் ஜாலிய விக்ரமசூரிய சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாலிய விக்ரமசூரிய வெளிநாடு செல்ல தடைவிதித்தது.

இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று அமெரிக்கா சென்ற அவர் மீண்டும் இலங்கை திரும்பவில்லை.

இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

மேலும், ஜாலிய விக்ரமசூரிய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் உறவு முறை மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.