வவுனியா நகரப்பகுதியில் மின்குமிழ்களை பொருத்துவதற்கு மின்சாரசபை ஒத்துழைக்க வேண்டுமென கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகர்ப்பகுதியில் பழுதடைந்த மின்குமிழ்களை மீண்டும் பொருத்துவதற்கு மின்சாரசபை, நகரசபைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வவுனியா நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா நகர்ப்பகுதியில் நகரசபையால் பொருத்தப்பட்டுவரும் மின்குமிழ்கள் மின்சாரசபைக்கு நிதி செலுத்தப்பட்டு மின்சாரசபையால் விடுவிக்கப்பட்ட ஊழியர் ஊடாக பொருத்தப்பட்டு வந்திருந்தது.

எனினும் தற்போது மின்குமிழ் பொருத்தும் பணிக்கு மின்சாரசபை தமது ஊழியரை வழங்காத நிலை காணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நகர்ப்பகுதியில் பழுதடைந்த மின்குமிழ்களை மாற்றியமைக்க முடியாதுள்ளதுடன் நகரசபை ஊழியர்களை கொண்டும் மின்குமிழ்களை மாற்ற முடியாது எனவும் மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களாலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட மின்குமிழ்கள் பொருத்த முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.