ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 4 பெண்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரான புளுமெண்டல் சஞ்ஜீவ என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவரையும், அவர்களுக்கு நெருக்கமான மற்றுமொரு நபரையும் கொழும்பு, கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சஞ்ஜீவ என்பவரின் மனைவி, அவரது புதல்வர் மற்றும் புதல்வரின் நண்பர் ஆகியோரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 30 கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பணம் மற்றும் 5 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

அதேவேளை கம்பஹா மாவட்டம் பியமக உலஹிட்டியாவ பிரதேசத்தில் 5.2 கிராம் ஹெரோயின், 15 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பியகம பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சந்தேகநபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் தற்போது விளக்கமறியலில் இருந்து அங்கொட சங்கா என்ற நபருக்கு நெருக்கமான பெண் எனவும், அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பெண், பேலியகொட குடு ரமணி என்ற பெண்ணின் புதல்வி எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.