மட்டக்களப்பில் முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட விவசாய காணிகளில் பயிரிட முடியாத நிலை : இரா.துரைரெத்தினம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட விவசாயக் காணிகளில் எந்தவித விவசாய பயிர் செய்கைகளிலும் ஈடுபட முடியாதளவிற்கு மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளனர்.

அவரது அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தவறான முறையில் மணலை எடுப்பவர்கள் ஒரு சிலருக்கு இலஞ்சத்தை வழங்கி விட்டு ஒருசில பொலிஸாரின் உதவியுடனும், அரசியல் பலத்துடனும் மணல் அகழ்வதற்கான செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

மாவட்டத்திலுள்ள அரச நிர்வாகத்தின் ஆளுமையை மீறிச் செல்கின்றளவிற்கு மணல் அகழ்விற்கான வேலைகள் அதிகரித்துச் செல்கின்றன.

இங்குள்ள எந்தவித பொது அறிவுமற்ற ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருசில அரசியற்பலம் உள்ளவர்களாலும், சில பாதுகாப்பு தரப்பினராலும், இங்குள்ள ஒருசிலரின் உதவியுடன் மணல் எங்கு இருக்கின்றதோ அதை அடையாளப்படுத்தி கொழும்பில் அரசியல் அதிகாரம் உள்ளவர்களினால் அனுமதியைப் பெற்று மாவட்டத்திலுள்ளவர்களுக்கு உத்தரவுகளை வழங்கி அப் பிரதேசம் சார்ந்த எந்த அறிவும் இல்லாதவர்களுடன் ஆலோசனையைப் பெற்று மணல் அகழ்வதற்கான வேலைகளை முடக்கியுள்ளனர்.

அப்பிரதேசங்களைச் சேர்ந்த தொழில் இல்லாத இளைஞர்கள் தங்களுடைய வறுமை காரணமாக இத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மணலை அகழ்வதற்கு வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் அப்பாவிகள், எதுவும் அறியாதவர்கள் இதற்கு சூத்திரதாரியாக இருக்கின்ற அனுமதி பெறுகின்ற அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் அமைப்பு ரீதியான கூட்டங்களை நடாத்தி அமைப்புக்களின் கலந்தாலோசனையுடனேயே மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

காகித தலைப்பையும், ரப்பர் முத்திரையையும் வைத்துக் கொண்டு தனிநபராக ஒருசிலர் கடிதங்களை வழங்குவதனூடாக பாரிய மோசடிக்கு வித்திடப்பட்டுள்ளனர்.

வெள்ள காலத்தில் மணல் வார்ப்பதைக் கூட தவறான முறையில் பயன்படுத்தும் அளவிற்கு மேற்பார்வை இல்லாத நிலை மணல் அகழ்வு விடயத்தில் உள்ளது கவலைக்குரிய விடயமாகும் என்று கூறியுள்ளார்.