அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்யுங்கள்!! மட்டக்களப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு - பன்குடாவெளி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் பன்குடாவௌியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிக்கு முன்பாக ஒன்று திரண்டு தேரரை கைது செய்யுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, காணி உரிமையாளர், விவசாயிகள், ஊர் பொதுமக்கள், இந்து மத குருமார்கள், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த காணிகளை புராதன தொல்பொருட்கள் உள்ள இடம் என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து 40 பரப்புக் காணியை தொல்பொருள் திணைக்களம் அடைத்து வைத்துள்ளது.

ஆனால் குறித்த 40 பரப்புக் காணியை தவிர ஏனைய வயல் காணிகளில் விவசாயம் செய்யுமாறு எமக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

நாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த உறுதி காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத பிக்கு அவர்கள் சட்டத்தை மீறி இந்த பகுதிக்குள் நுழைந்து அங்கு கடமையில் இருந்த அரச அதிகாரிகளை தாக்கினார்.

நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது பிக்குவிடம் அடிவாங்கிய ஒரு அரசாங்க அதிகாரி ஒற்றை காலில் செருப்பு இல்லாது ஓடினார்.

மரண வீட்டில் நின்ற எங்களை உடனடியாக வருமாறு அழைப்பு விடுத்தார்கள். நாங்கள் பயத்தில் வாகனம் பிடித்து ஓடிவந்தோம், இவ்வாறு இந்த பிக்குவின் அட்டகாசம் அதிகரித்து செல்கிறது.

இவருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது. பொலிசாருக்கு முன்னால் தான் இவ்வளவும் நடைபெறுகிறது. ஆனால் பொலிசார் அவருக்கு பயப்படுகின்றனர்.

எமது காணிகளை அளவீடு செய்ய பிக்குவிற்கு அதிகாரம் இல்லை அவர் எமது காணிக்குள் வரக் கூடாது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த நாட்டில் தமிழர்களை யாரும் அடிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என தெரிவித்தனர்.