மில்லியன் கணக்கான மதிப்புள்ள இத்தாலிய பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்திணைக்களம்

Report Print Ajith Ajith in சமூகம்

“வீட்டுக்கு வீடு” கூரியர் வசதியை தவறாக பயன்படுத்தி சீஸ், மதுபானம் மற்றும் பஸ்தா போன்ற பொருட்கள் இத்தாலியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தமை சுங்கத்திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமது உறவினர்களுக்கு அனுப்பிய இந்தப்பொருட்களே கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின்- ரோம், மிலன், புளோரன்ஸ் மற்றும் போலோக்னா ஆகிய இடங்களில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ள தமது உறவினர்களுக்கு இந்தப்பொருட்களை அனுப்பியிருந்தனர்.

இந்த பொருட்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று ஊருகொடவத்தையில் உள்ள சுங்கக் களஞ்சியத்தில் இருந்து இந்தப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழமையாக எந்தவொரு இலங்கை வெளிநாட்டினரும் உணவு, பானங்கள், உடைகள், பரிசுப் பொருட்கள் போன்ற சட்டபூர்வமான நுகர்வோர் பொருட்களை அனுப்பலாம்.

அத்துடன் அவர்களது உறவினர்களுக்கும் விலைக்கூடிய வெளிநாட்டு மதுபான போத்தல்களை கூட அனுப்ப முடியும்.

ஆனால் சமீப வாரங்களில் பலர் இந்த ஒதுக்கீட்டை துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதிக அளவு வெளிநாட்டு மதுபானங்களை அனுப்பியதாகவும் சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை முடிவுக்கு அமைய, இந்த பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்களின் கீழ் வருகின்றன.

சுங்க பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய இதனை தெரிவித்துள்ளார்.