நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்

Report Print Suman Suman in சமூகம்

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய நிகழ்வில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவற்றில் அனைத்தையும் உடனடியாக செய்ய முடியாது. ஆனால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சமூக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சமூகமட்ட அமைப்புக்கள், பொலிஸாரினுடைய ஒத்துழைப்பு எமக்கு தேவையாக இருக்கின்றது.

அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதில் பலரும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்கள். ஆயினும் சமூக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சமூக மட்ட அமைப்புக்களும் அக்கறையுடன் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

காணி, கல்வி, வீடமைப்பு உள்ளிட்ட விடயங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை குறிப்பிட்டுள்ளீர்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று வீடு உள்ளிட்ட விடயங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தியே வழங்கப்படுகின்றது.

காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்ற கொள்கை சுற்று நிரூபத்தின் ஊடாக பல்வேறு காணிகளுக்கான பிரச்சினை தீர்வுக்கு வரும் என நம்புகின்றோம்.

காணி முரண்பாடுகள், அனுமதிப்பத்திரங்கள் இல்லாதவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளோருக்கான சந்தை வாய்ப்புக்கள் இல்லை.

உண்மையில் பனை உற்பத்தி தொடர்பான விடயங்களுக்கு பனை அபிவிருத்தி சபை உள்ளது. அதேவேளை கூட்டுறவு சங்கங்களும் காணப்படுகின்றன.

அவர்களுடன் இணைந்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

நுண்கடன் பிரச்சினை தொடர்பில் அண்மையில் மத்திய வங்கி ஆளுநர் கிளிநொச்சிக்கு விஜயம் மெற்கொண்டு இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றார்.

நுண்நிதி கடன்களிலிலே ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக கடன்களை பெறுவதற்கு தேவையோடு இருப்பவர்கள் போன்றவர்களை இவ்வாறான நிறுவனங்களிற்குள் தள்ளாமல் அவர்களுடைய தேவைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இவ்விதமாக நுண்நிதி கடன்களிலே சிக்குண்டவர்களை வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையிலே கூட்டுறவு சங்கங்கள் ஊடாக குறைந்த வட்டியில் கடன் பெற்று சுயதொழிலில் முன்னேறிச் செல்வதற்கு ஏற்ற விதத்திலே முன்னெடுக்கப்படவுள்ளது என கூறியுள்ளார்.