மைத்திரியின் செயற்பாடு குறித்து சட்டமா அதிபரின் பிரதிநிதி குற்றச்சாட்டு!

Report Print Ajith Ajith in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சட்டமா அதிபரின் பிரதிநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, ஆணைக்குழுவில் அளித்த சாட்சியத்தை மறுத்து மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட ஊடக அறிக்கையின் மூலம் ஆணைக்குழுவுக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் பிரதிநிதி இன்று ஆணைக்குழுவில் வைத்து தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை சட்டமா அதிபரின் பிரதிநிதி ஆணைக்குழுவில் கூறியபோது மைத்திரிபால சிறிசேனவும் ஆணைக்குழு வளாகத்தில் இருந்தார்.

ஆணைக்குழுவின் ஆணைப்படி, அதன் அமர்வுகள் நீதித்துறை நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.

எனவே இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதித்தமையை தண்டிக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகாரத்தில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்போது சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் சமீரா டி சில்வாவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையுடன் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபரின் பிரதிநிதி ஆணைக்குழுவை கேட்டுக்கொண்டார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி மைத்திரி குணரட்ன,

தமது கட்சிக்காரர் அரசியல்வாதி என்ற அடிப்படையில் ஆதரவாளர்கள் மத்தியில் தமது பிம்பத்தை பாதுகாப்பதற்காகவே அந்த அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.