மட்டக்களப்பில் அரச அதிகாரிகளை தாக்கிய தேரருக்கு ஏற்பட்டுள்ள நிலை! நீதிமன்றம் அழைப்பாணை

Report Print Murali Murali in சமூகம்

அரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த விஹாரை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறிய பகுதியில் சிலர் விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அம்பிட்டிய சுமணரத்தன தேர் தனது முகப்புத்தகத்தின் ஊடாக காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் அந்த பகுதிக்கு நேற்று நில அளவையாளர்கள் வருகைத் தந்து அளவீடுகளை முன்னெடுத்த போது அதற்கு அம்பிட்டிய சுமணரத்தன தேரர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உரிய முறையில் அளவை நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என தெரிவித்தே தேரர் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என குறிப்பிடும் பெயர் பலகையையும் அங்கு காண முடிந்தது.

இதனையடுத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் தலையிட்டு அளவீட்டு செயற்பாடுகள் நிறைவு பெறும் வரை விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில் பிரச்சினை சுமூகமடைந்தது.

எவ்வாறாயினும் அம்பிட்டிய சுமணரத்தன தேரரின் கட்டுப்பாட்டில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் மூன்று அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.