மைத்திரிக்கும், பூஜித் ஜெயசுந்தரவுக்கும் இடையிலான பிளவு குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம்

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை, சஹ்ரான் ஹாஷிம் மீதான விசாரணையில் இருந்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவை நியமித்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு படுகொலை குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் இந்த தகவலை அவர் வழங்கியுள்ளார்.

சாட்சியத்தின்போது, அரசாங்கத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் கேட்ட கேள்வி ஒன்றின்போதே இந்த தகவலை ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கும் இடையிலான பிளவு எப்போது ஆரம்பித்தது என்று மேலதிக மன்றாடியார் நாயகம் சாட்சியைக் கேட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருவருக்கும் இடையிலான பிளவு விரிவடைந்தது. முன்னாள் ஜனாதிபதியிடம் பல்வேறு தரப்பினரும் பூஜித் ஜெயசுந்தரவைப் பற்றி பொய்களைக் கூறியதால் அந்த பிளவு விரிவடைந்தது என்றும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது 2019 ஏப்ரல் 16ஆம் திகதியன்று திட்டமிடப்பட்டிருந்த உளவுத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி தலைமை தாங்கினாரா என்று மேலதிக மன்றாடியார் நாயகம் சாட்சியிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சாட்சியாக ஹேமசிறி பெர்ணான்டோ தமிழ், சிங்கள புத்தாண்டு காலம் என்பதால் பாதுகாப்புப் படைத் தலைவர், முத்தரப்புத் தளபதிகள் மற்றும் பல அதிகாரிகள் விடுப்பு கோரியிருந்தனர்.

எனவே, திட்டமிடப்பட்ட கூட்டம் நடத்தப்படவில்லை. தவிர, செவ்வாய்க்கிழமைகளில் உளவுத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்துவது கட்டாயமில்லை.

இந்த சந்திப்புகள் 5 நிமிடங்களுக்குள் முடிவுக்கு வந்த நேரங்களும் பின்னர் கூட்டங்கள் எதுவும் நடக்காத நேரங்களும் இருந்தன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட மேலதிக மன்றாடியார் நாயகம் சாட்சியை பார்த்து, நீங்கள் உங்கள் கடமைகளை சரியாக செய்யவில்லை என்று தாம் பரிந்துரைத்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்று மன்றாடியார் நாயகம் கேட்டார்.

எனினும் இதனை நிராகரித்த சாட்சி, சரியான புலனாய்வு தகவல்களை வழங்க அரச புலனாய்வுத்துறை தவறிவிட்டது என்று கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்திய நாட்களில் நடைபெற்ற கடைசி உளவுத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது கூட நிலந்த ஜெயவர்த்தன முன்னச்சரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை.

சஹ்ரான் மீதான விசாரணைகளை வழிநடத்துவது நிலந்த ஜெயவர்த்தனவுக்கு ஒதுக்கப்பட்டது.

தமக்கு தெரிந்தவரை, முன்னாள் ஜனாதிபதி, எழுத்துப்பூர்வமாக, சஹ்ரான் தொடர்பான ஆய்வுகளை நிலந்தாவிடம் ஒப்படைத்தாக சாட்சி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறிக்கிட்ட ஆணைக்குழுவின் நீதிபதி ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வின் முன்னாள் பணிப்பாளர் - நிலந்த ஜெயவர்தனவுக்கு தொடர்புடைய விசாரணைகளை வழங்கினார்; என்பதை நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சாட்சியான ஹேமசிறி பெர்ணான்டோ, இந்த சம்பவம் குறித்து முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ் தம்மிடம் கூறியதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2018இல் நடந்த உளவுத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் ஜெயசுந்தரவிடம் இருந்து சஹ்ரான் தொடர்பான விசாரணைகளை மீள எடுக்கவும் பதிலாக நிலந்த ஜெயவர்தனவிடம் அந்த விசாரணைகளை ஒப்படைக்கவும் கூறியுள்ளதாக சாட்சி தெரிவித்தார்.