வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புராதன கால சிலையை கைப்பற்றிய பொலிஸார்

Report Print Navoj in சமூகம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதிலுள்ள வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபரிடமிருந்து குறித்த சிலையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.சி.சந்தனகுமார தெரிவித்துள்ளார்.

கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த புராதன காலத்து சிலை மீட்கப்பட்டுள்ளது.

கல்குடா பிரதேசத்திலுள்ள ஆலயத்திலிருந்து அடையாளம் தெரியாத நபர்களினால் சிலையொன்று களவாடப்பட்டுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சிலை தொப்பிகல பிரதேசத்தில் சட்டவிரோத புதையல் அகழ்வு நடவடிக்கை மூலம் பெறப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.