ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சாட்சியாளரான ஜே.எம்.ரண்பண்டார என்பவருக்கு, இந்த வழக்கு முடிவடையும் வரை உயர் நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றங்களை தவிர வேறு எந்த நீதித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சென்று சாட்சியமளிப்பதை தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் அந்த உத்தரவை மீறி, அரசியல் பழிவாங்கல் சம்பந்தமான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இதற்கு முன்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த சாட்சியாளரை கடுமையாக எச்சரித்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தது எனவும் எனினும் அந்த சாட்சியாளர் மறுதினமே ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நீதிமன்ற உத்தரவை மீறியமை சம்பந்தமாக சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்க கால அவகாசம் வழங்குமாறு திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த சாட்சியாளர் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி இருந்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டாம் எனக் கூறி, விசேட மேல் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.