இரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி - அரச காணியில் வசிப்போருக்கு ஏமாற்றம்

Report Print Tamilini in சமூகம்

அரசுக்கு சொந்தமான காணிகளின் ஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மக்களுக்கே அந்த காணிகளை பகிர்ந்தளித்து சட்டரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பில் அண்மையில் விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

2192/36 என்ற இலக்கமுடைய அந்த வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்வதாக காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹெரத், சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.

கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் கடந்த 10ஆம் திகதி வெளியிடப்பட்டது. விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான காணிக் கச்சேரி 2020.11.01 ஆம் திகதியில் இருந்து 2020.11.21ஆம் திகதிக்கிடையில் இயைபுடைய பிரதேச செயலாளர் தீர்மானிக்கின்ற திகதியில் நடத்தப்படும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவ்விஷேட வர்த்தமானி நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டதனால் அரச காணியில் வசித்துவருபவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.